Monday, December 31, 2007

One flew over the cuckoo's nest

உலக சினிமாக்களில் அவ்வப்போது சஞ்சரித்து வருகிறேன். அண்மையில் One flew over the cuckoo's nest பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Milos Forman படம். Michael Douglas தயாரிப்பு (ஆச்சர்யம்!).

ஆழமானது என்றாலும், சாதரணக் கதை (நாவலைத் தழுவிய படம் - நாவலைப் படித்ததில்லை; பிடித்திருக்கும் என்று தோன்றவில்லை). நிர்ணயிக்கப்பட்ட விதகளுக்கும் மனித விருப்பத்திற்கும் விடுதலையுணர்வுக்கும எதிரான போராட்டம். சொன்ன விதம் உலுக்குகிறது. அத்தனை பேரும் அழுத்தமாக நடித்திருக்கிறார்கள். Jack Nicholson நடித்து As good as it gets, Departed பார்த்திருக்கிறேன். Al Pacino, Robert DeNiro வரிசையைச் சார்ந்தவர். சுற்றிலும் அனைவரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிற போதும் இவரால் தனித்துத் தெரிய முடிகிறது.

நாயக்கனுக்கும் நாயகிக்கும் இடையில் இடைவிடாத போராட்டம். இறுதியில், தமிழ்ப்படமாக இருந்தால் காதலித்திருப்பார்கள். இதில் பார்வை பரிமாற்றத்தற்கான அர்த்தத்தை (நிறைய வெறுப்பு,போட்டி கொஞ்சம் காமம்கூட இருக்கலாம்) பார்ப்பவர்கள் கற்பனைக்கு விட்டுவிட்டார்கள்.

தமிழில் இப்படி படம் எடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. சிவாஜியால், கமலால் நடிக்க முடிந்த பாத்திரங்கள்தான். சுற்றிலும் ஈடுகொடுக்க இவ்வளவு துணைநடிகர்கள் கிடைப்பார்களா தெரியவில்லை. பாடல்கள் இல்லாத படத்தை எடுக்க இயக்குனர் கிடைப்பாரா தெரியவில்லை. காதல் இல்லாத படத்தை எடுக்கத் தயாரிப்பாளர் கிடைப்பாரா தெரியவில்லை. ரசிப்பதற்கு நிச்சயம் ஆட்கள் இருக்கிறார்கள்.

அஞ்சறைப் பெட்டி: மௌனியின் கதைகள் - சில குறிப்புகள

அஞ்சறைப் பெட்டி: மௌனியின் கதைகள் - சில குறிப்புகள

யாமறிந்த மொழிகளிலே

மற்றவர்கள் தமிழ் பற்றி போற்றிப் பேசும்தான் பெருமையாக இருக்கிறது. நம்மை நாமே தட்டிக் கொடுப்பது எத்தனை நாட்களுக்குச் சுவைக்கும். பாராட்டு என்பது பிறர் மொழிவது தானே?

'THere has to be a feeling that when you are talking about Tamil or whatever literature, you are, in a sense, touching the feet of the language, respecting it. But most Maharashtrians just caricature and ridicule the sounds of South Indian languages. We ignore the fact that Tamil is one of the oldest languages in the world. Instead of dismissing it, why don't we want to learn it instead? And we don't have to be hypocritical about it--most of the writing being done in Marathi or Bengali and other languages I'm sure is foul. But so is most of the work being done in English or French or German!'

- Kiran Nagarkar (http://www.anothersubcontinent.com/kn5.html).

சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு தமிழகத்துச் சந்தங்கள் பரிசளிப்போம்.

பாரதி மீதே பழியா?

அனேகர் பார்க்கிற ஒரு வலைப்பதிவில் பாரதி மீது ஒரு நீண்ட தாக்குதல் நடந்துகொண்டு இருக்கிறது. அவன் மீது சாதிச்சாயம் பூசப்படுவது பார்த்து வருத்தமாக இருக்கிறது. 'ஆரிய பூமி' என்று பாடிவிட்டானாம்.

பாரதிமேல் இத்தனை வன்மம் ஏன்? பாரதி எழுதிய காலத்தில் திராவிடம் என்கிற concept எந்த அளவிற்கு நிறுவப்பட்டிருந்தது என்பது கேள்விக்குறி. 'பார்ப்பனரை ஐயரென்ற காலமும் போச்சே' என்று சொன்னவன் பாரதி. அவனை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், அவன் கவிதைகளின் தாக்கம் தணியப்போவதில்லை. நாட்டைப்பற்றி மொழியைப்பற்றி சமுதாயத்தைப்பற்றி, ஏன் உலகைப்பற்றி தமிழில் பாடிய முதல் கவிஞன், முழுமையான கவிஞன் பாரதி.

அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தை மட்டும் பார்க்கிற மாதிரி இருக்கிறது, பாரதியின் கவிதையின் உயிர்நீக்கித் துகிலுறித்து வெறும் வார்த்தைகளை விமர்சிப்பது.

போராளிகள் கவனிக்கவும்...

வன்முறையை விதைக்கிறவர்கள், வன்முறையை வாழ்க்கையாக்கிக்கொண்டவர்கள் வன்முறைக்ககே இரையாவது மறுபடி மறுபடி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பூட்டோ மரணம் மற்றுமோர் எடுத்துக்காட்டு. மிரட்டல்களுக்குப் பணியாத துணிவை, உலகத்தோடு சேர்ந்து நானும் பாராட்டுகிறேன். ஆனால் அவர் வளர அனுமதித்த வன்முறை விதைதான் வளர்ந்து, இன்று அவர் மீதே விஷக்காற்றை வீசியிருக்கிறது.

இந்திரா, ராஜீவ் மற்றும் பலரும் அத்தகைய தவறுகளின் விளைவுக்கு இரையானவர்களே! ஏன், மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத காங்கிரஸின் இயலாமையோ முயலாமையோதான் காந்தியையே வன்முறைக்கு இரையாக்கியது. வாழ்க்கை முழுவதும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனிதனுக்கு வன்முறைதான் முற்றுப்புள்ளி வைத்தது - அவன் வளர்த்த இயக்கத்தின் தோல்வியால். ஆனால் மரணத்திற்குப் பின்னும், அந்த அமைதிக் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அமைதியால் மலர்ந்த இந்தியாவையும், அதே நேரத்தில் உதிரத்தில் பூத்த பாக்கிஸ்தானையும் பார்க்கிறவர்களுக்குப் புரியும் -அமைதிப் போரின் வலிமையும், வன்முறையின் ஆறாக்காயங்களும்.

ஆனால், இன்றைக்கும் போராளிகளும், வன்முறையாளர்களும் கூர்வாள்களும் தோட்டாக்களும் நிரந்திரத் தீர்வுகள் தேடித்தரும் என்று நம்புகிறார்கள்? குஜராத்தில் மோடி எத்தனை முறை வென்றாலும் அவர் வளர்த்த வன்ம விலங்கு விழுங்கக்காத்திருப்பது தெரியவில்லையா? இலங்கையில் ஒரு pyrrhic போர் நடத்திவருவது புலிகளுக்குப் புரியவில்லையா? நந்திகிராமில் வைத்த தீ தம்மையும் சேர்த்துப்பொசுக்கும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் அறியவில்லையா? உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்த அறியாமைக்கு அழிவே இல்லையா?

திறமான புலமையெனில்...

உலக இலக்கியங்களை அலசிப் பார்கையில், தெளிவாய்த் தென்படுகிறது - இன்னமும் நாம் வெகுதூரம் பயனிக்கவேண்டும். நாம் வார்த்தைகளில் விளையாடக் கற்றுக்கொண்ட அளவிற்கு கற்பனையிலோ, கதைக்களத்திலோ, சொல்முறையிலோ, கருத்தாளத்திலோ, கருத்துப்பரப்பிலோ இன்னமும் உலக தரத்தை அடையவில்லை என்பதை வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நம் சிந்தனை ஒரு குறுகிய வட்டத்துக்குள் பெரும்பாலும் சிறைபட்டுவிடுவது ஒரு காரணமோ? நம் வாழ்க்கையே ஒரு சின்ன வட்டத்திற்குள் கழிக்கப்படுவது ஒரு காரணமோ? அந்த வட்டத்தைவிட்டு வெளியேறுகிறவர்களில் பெரும்பாலோர் தமிழ்வட்டத்தையும் தாண்டிவிடுவது ஒரு காரணமோ?

திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும். அப்படியோர் நிகழ்வுக்காக நான் காத்திருக்கிறேன்.